தயவுசெய்து ஆளுநருக்கு அட்வைஸ் சொல்லுங்க! குடியரசு தலைவருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருக்க தயாராக இல்லாத ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்றத்தில் முன்மொழிந்த தீர்மானத்தில், “தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று, ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள அரசுக்கு, தமிழ்நாடு மக்களின் தமது எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின்படியான பொறுப்பும், ஜனநாயகரீதியான கடமையும் உள்ளது. இவற்றைக் கருத்தில்கொண்டு, மாண்புமிக்க இந்தச் சட்டமன்றப் பேரவைக்கு உள்ள இறையாண்மை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான சட்டமியற்றும் பொறுப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள பல்வேறு மசோதாக்களை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் அனுமதி அளிக்காமல், காலவரையின்றி கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை இப்பேரவை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவி, எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணம் ஆகியவற்றுக்கும், மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு, அரசமைப்புச் சட்டத்திற்கும், கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிராகவும், இப்பேரவையின் மாண்பைக் குறைத்து, பாராளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாண்மையை (Supremacy of Legislature) சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசையும், மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களையும் வலியுறுத்துவது என்றும். மக்களாட்சி தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இச்சட்டமன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றிற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டும் என ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.