ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் மகத்தான வெற்றி பெருவார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.


ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், “ காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து முயற்சியையும் மேற்கொள்ளும். இதற்காக கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார குழு அமைத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இத்தொகுதியில் அதிமுகவோ, பாஜக தலைவரோ யார் போட்டியிட்டாலும் அவர்கள் தோற்பது உறுதி. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார்.
திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 12 மணி நேரத்திற்கு உள்ளாக ஏராளமான வன்முறை சம்பவங்கள் திரிபுராவில் தலைவிரித்து தாண்டவம் ஆடுகின்றது. வீடுகள் கொளுத்தப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தொண்டர்கள் தாக்கப்படுகிறார்கள். ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.
காவல்துறை அதிகாரி விசாரித்துக் கொண்டிருக்கின்றோம் என்று மிக மென்மையான முறையில் பதில் தருகிறார். தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாட்டை சர்வதிகார வன்முறை செயல்பாட்டை பாசிச செயல்பாட்டை ஒன்றியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலமாக மாநிலங்களிலும் மத்தியிலும் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அல்லது தொடர்வதற்கான முறையை கையாளுகின்றனர்.
இது மிகவும் ஆபத்தான போக்கு ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். இது மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதை மிக வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய முறையை அனுமதிக்க கூடாது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். காவல்துறை பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும் சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும். அப்படி செய்தால்தான் ஜனநாயக பூர்வமான தேர்தல் நடைபெறும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கம் வேகமாக பாஜகவால் முன்வைக்கப்படுகிறது. நடைமுறையில் சிறிதும் சாத்தியமற்றது என்பது பிஜேபிக்கு நன்றாக தெரியும். இதற்கு சரியான காரணம் சொல்லப்பட்டாலும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.
ஒரே நாடு ஒரே கட்சி ஒரே ஆட்சி என்ற சர்வாதிகார பாசிச நடைமுறையை கொண்டு வருவதற்கு இத்தகைய முறையை கடைப்பிடிக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது இதை நிராகரிக்க வேண்டும். இந்தியாவில் மகளிர் ஆணைய தலைவரே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றார் அவருக்கே இந்த கதி என்றால் மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு? பெண்கள், தலித், சிறுபான்மை மக்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கின்றது. ஒன்றிய அரசு பின்பற்றக்கூடிய தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும் தொழிலாளர் விரோத சட்டங்களை மாநில அரசுகள் ஏற்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் AITUC சார்பில் 500க்கும் மேற்பட்ட மையங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.
