தமிழ்நாடு ஆட்டோ–கால் டாக்ஸி ஓட்டுநர்கள் யூனியன் கூட்டமைப்பு, வரும் பிப்ரவரி 10-ம் தேதி சென்னையில் ஒருநாள் முழு வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டிய தமிழ்நாடு ஆட்டோ–கால் டாக்ஸி ஓட்டுநர்கள் யூனியன் கூட்டமைப்பு, வரும் பிப்ரவரி 10-ம் தேதி சென்னையில் ஒருநாள் முழு வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், அதனுடன் இணைந்து மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் ஜாகிர் உசேன் பேசினார். அப்போது, ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளாா்.

2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வாக்களித்தவர்களில் ஆட்டோ–கால் டாக்ஸி ஓட்டுநர்களும் முக்கியமானவர்கள் என குறிப்பிட்ட அவர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் தங்களுடைய முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பலமுறை முன்வைக்கப்பட்டும் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், ஓலா, ஊபர், ரேப்பிட்டோ, நம்ம யாத்திரி உள்ளிட்ட அக்ரிகேட்டர் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்காக அக்ரிகேட்டர் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என்றும், இது ஓட்டுநர்களின் பிரச்சனைகளை தீர்க்காத அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது என்றும் ஜாகிர் உசேன் தெரிவித்தார்.
தமிழகத்தின் பல பள்ளிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை பயன்படுத்தி பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் நடைமுறை அதிகரித்து வருவதாகவும், இது குழந்தைகளின் உயிருக்கு கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன் காரணமாக அரசுக்கு பெரும் வரி வருவாய் இழப்பும் ஏற்படுகிறது என அவர் கூறினார்.
கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சரை பலமுறை சந்தித்து மனு அளித்தபோதும், போக்குவரத்து துறை ஆணையர் அல்லது உயர் அதிகாரிகள் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்த மறுப்பதாகவும், இது அதிகாரிகள் அமைச்சர் பேச்சைக் கூட கேட்பதில்லை என்பதை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அக்ரிகேட்டர் நிறுவனங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் அல்லது உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை பார்க்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது என்றும் அவர் கூறினார்.
இதனால் வலுவான போராட்டங்களை முன்னெடுக்க தவிர வேறு வழியில்லை என முடிவு செய்துள்ளதாக தெரிவித்த ஜாகிர் உசேன், போராட்ட அட்டவணையையும் அறிவித்தார். அதன்படி, வரும் 29-ம் தேதி கோவை போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் முன்பும், பிப்ரவரி 3-ம் தேதி திருநெல்வேலி போக்குவரத்து துறை துணை ஆணையர் அலுவலகம் முன்பும்,5-ம் தேதி மதுரை போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் முன்பும்,9-ம் தேதி திருச்சி போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகம் முன்பும் போராட்டங்கள் நடைபெறும்.
இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 10-ம் தேதி ஆட்டோ, கால் டாக்ஸி மற்றும் டூரிஸ்ட் வாகனங்கள் ஒருநாள் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, சென்னை போக்குவரத்து ஆணையரகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.


