பெற்றோரைச் சுமையாகக் கருதி வீட்டை விட்டு வெளியேற்றும் அவலம் தொடர்ந்து வரும் நிலையில், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையோரம் ஆதரவற்ற நிலையில் தவித்த முதியவரைச் சமூக ஆர்வலர் ஒருவர் மீட்டுப் பராமரித்துள்ள சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள இந்தப் பகுதியில், வீடுகளில் பராமரிக்க இயலாத முதியோர்களைச் சொந்தக் குடும்பத்தினரே பொது இடங்களில் இறக்கிவிட்டுச் செல்லும் சோகம் தொடர்கிறது. உணவின்றி, முகவரியும் சொல்லத் தெரியாமல் சாலையோரங்களில் தங்கும் இவர்கள் அக்கம் பக்கத்தினர் தரும் உணவை நம்பி வாழ்நாளைக் கழித்து வருகின்றனர்.

10 நாட்களாகப் பேருந்து நிழற்குடையில் அவதி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள செல்லப்பனேந்தல் பேருந்து நிறுத்தத்தில், சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 10 நாட்களாக ஆதரவின்றித் தவித்து வந்தார். தன்னிடம் பேசியவர்களிடம் தனது பெயர் ரவி என்றும், வேலூர் மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் என்றும் அரைகுறையாகத் தெரிவித்த அவருக்குத் தன் குடும்ப விவரங்களை முழுமையாகக் கூறத் தெரியவில்லை. நீண்ட நாட்களாகக் குளிக்காமலும், உணவின்றியும் துர்நாற்றத்துடன் கிடந்த இவரின் பரிதாப நிலை குறித்த தகவலும் புகைப்படங்களும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவின.
சமூக ஆர்வலரின் மனிதநேய நடவடிக்கை
இதுகுறித்துத் தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதிதாசன் (30), உடனடியாகச் செல்லப்பனேந்தல் பகுதிக்கு விரைந்து வந்து அந்த முதியவரை மீட்டார். அவருக்கு முடி திருத்தம் செய்து, சோப்பு போட்டுக் குளிப்பாட்டி, புத்தாடைகள் வழங்கி அன்புடன் உணவளித்தார். நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் முடங்கிக் கிடந்ததால் உடல் முழுவதும் புண்களுடனும் சத்துக் குறைபாட்டுடனும் அவதிப்பட்டு வரும் அவருக்கு முதற்கட்ட மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவரைப் பாதுகாப்பான முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலரின் உருக்கமான வேண்டுகோள்
இதுகுறித்துச் சமூக ஆர்வலர் பாரதிதாசன் பேசுகையில், “தயவுசெய்து பெற்றோரைக் கைவிடாதீர்கள்; உங்களை ஆளாக்கியவர்களை ஒருவேளை உணவிற்காக மற்றவர்களிடம் கையேந்த விடாதீர்கள். கடந்த 18 ஆண்டுகளாக ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பலரை மீட்டுக் காப்பகங்களில் சேர்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த முதியவரையும் மீட்டுள்ளோம்” எனக் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.
