தீபாவளி பண்டிகை முடிந்து ஏராளமானோர் சென்னை திரும்புவதால் பரனூர், விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் பணி காரணமாக சென்னையில் வசித்த லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்பி வருகின்றனர்.
சொந்த வாகனங்களில் சென்றவர்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையைடுத்து வருவதால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பரனூர் சுங்கச்சாவடியில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வாகனங்களை வேகமாக அனுப்பி வருகின்றனர். மேலும் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், சென்னை நோக்கி அதிகளவில் வாகனங்கள் வந்து கொண்டுள்ளதால் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.