தேர்வு பயம் காரணமாக கும்பகோணத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் சிவ மகா (17). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். நேற்று மாலை இவரது தாய் விஜய் சித்ரா, இளைய சகோதரி அருள் பரணிகா சிவமகா ஆகிய மூவரும் திரைப்படத்திற்கு செல்வதாக இருந்தது. சிவமகா இன்று பள்ளியில் தேர்வு இருப்பதாகவும், அதற்கு படிக்க வேண்டும் எனக் கூறியும் திரைப்படத்திற்கு செல்ல மறுத்து வீட்டிலேயே தங்கியுள்ளார்.
இவரது தாயும், இளைய சகோதரியும் திரைப்படத்திற்கு சென்றுள்ளனர். திரைப்படம் பார்த்துவிட்டு தாயும் மகளும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சிவமகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தரவே, காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக நாச்சியார் கோவில் காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாதாந்திர தேர்வு பயம் காரணமாக பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
