3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.

பிரதமர் மோடி மூன்று நாட்கள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை 04.50 மணிக்கு சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து மாலை 06.00 மணிக்கு நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 6-வது கேலோ இந்தியா தொடக்க விழாவில் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சில் செல்லும் பிரதமர் மோடியை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்கவுள்ளனர். அங்கிருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் வகையில் யாத்ரிநிவாஸ் எதிரே ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பஞ்சக்கரை சாலை வழியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, அதனை தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.