தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. நேற்று காலை அருவிகளில் நீர்வரத்து சீரான நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்து தண்ணீர் வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.