சம்பள பாக்கி- சிவகார்த்திகேயன், ஞானவேல்ராஜா சமரசம்
சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டுள்ளார்.இந்த ஒப்பந்தத்தில் 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக தெரிகிறது. 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு வந்த போது இரு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்தி கொள்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிடபட்டது. இந்த வழக்கு இன்று மத்தியஸதர் மையத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம் ஆஜராகி இரு தரப்பும் சமரசம் ஏற்படுத்தியது தொடர்பான மனுவை அளித்தார். இதனை தொடர்ந்து சம்பள பாக்கி தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையிலான வழக்கு சமரசம் அடைந்துள்ளது.