துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான 1.24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னை சர்வதேச விமான நிலைய வருகை பகுதியில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் துபாயிலிருந்து, சென்னைக்கு வந்த தனியார் விமானத்தில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, துபாய் விமானத்தில் வந்துவிட்டு, மற்றொரு விமானத்தில் இலங்கைக்கு செல்லவிருந்த இலங்கையை சேர்ந்த ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அவர், டிரான்சிட் பயணிகளுக்கான கழிவறைக்கு சென்றுவிட்டு, நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த கழிவறைக்குள் சென்று சோதனையிட்டனர்.
அப்போது அந்த பயணி தண்ணீர் தொட்டிக்குள் பேஸ்ட் வடிவிலான 1.24 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் ஆகும். இதை அடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், இது தொடர்பாக இலங்கை பயணியை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.