15 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடங்கி பொருநை அருங்காட்சியகமான உருவெடுத்துள்ள இந்த நீண்ட பயணத்தை என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரும் பெருமையாக உணர்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் ரூபாய் 56.36 கோடி மதிப்பீட்டில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் இருந்த புகைப்படமும், இன்று பொருநை அருங்காட்சியகமாக உருப்பெற்றிருக்கும் பயணத்தையும் நினைவுகூர்ந்து மனம் நிறைந்த உணர்வை கொண்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிதி, சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள வலைதள பதிவில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொல்லியல் துறையின் அமைச்சராக ஆதிச்சநல்லூர் தொல்லியல் மேட்டினையும், அகழாய்வுகள் நடைபெற்ற இடங்களையும் பார்வையிட்ட நினைவுகள் நெஞ்சில் நீங்காதிருக்கின்றன.

ஆதிச்ச நல்லூரும், சிவகளையும், கொற்கையும், துலுக்கர்பட்டியும் என தமிழர் தம் தொல் பண்பாட்டைப் பறைசாற்றும் இடங்கள் யாவும் இன்று தண்பொருநை தீரத்தில் மாபெரும் அருங்காட்சியகத்திற்குள் தமது தொன்மை மாறாத அரும் பொருட்களுடன் பெருமையோடு காட்சியளிக்கின்றன.
நீண்ட இந்தப் பயணத்தை என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரும் பெருமையாக உணர்கிறேன். பல தலைமுறைகளைக் கடந்து நம் வரலாற்றை கொண்டு செல்லும் “பொருநை அருங்காட்சியகத்தை” சீர்மிகு சிறப்புடன் அமைத்துள்ள நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்நிகழ்வு குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், இந்தியாவில் தென் பகுதியில் முதன்முதலாக தொல்லியல் ஆய்வு 1876ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெற்றது. இந்த ஆய்வில் கிடைத்த தொல்லியல் பொருட்களை டாக்டர் ஜாகூர் ஜெர்மன் நாட்டில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்திற்கு கொண்டு சென்றார். அப்போது தொடங்கிய பொருநை அருங்காட்சியத்தின் கனவு 150 வருடங்களுக்குப் பின்பு இன்று நினைவாகியுள்ளது.
தமிழருடைய நாகரீகத்தை பொருநை நதிக்கரையில் இருந்து தான் எழுத வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் 2010ஆம் ஆண்டு துவங்கியே அமைச்சர் தங்கம் தென்னரசு ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகளில் மிகப்பெரும் பங்கினை ஆற்றி வருகிறார். இது எங்களைப் போன்ற எழுத்தாளர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு நன்றாக தெரியும். அவரது சீரிய முயற்சியினால்தான் 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ஆதிச்சநல்லூர் வரலாறு பேசுப்பொருளானது. ஏனெனில் பொட்டல்காடாக இருந்த பகுதியில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதை நேரிலேயே பார்வையிட்டு வழிநடத்தினார். கிட்டத்தட்ட 2010ல் போடப்பட்ட விதைதான் இன்று இந்த பொருநை அருங்காட்சியகமாக விருட்சம் அடைந்துள்ளது எனக் கூறினார்.
பிஎஸ்என்எல் கட்டிடத்தில் தீ விபத்து: சென்னையில் அவசர கால உதவி எண்கள் பாதிப்பு!


