சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கம்
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 1,800 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி வருகிற மே மாதம் 4 ஆம் தேதி இரவு 11.58 மணிக்கு தொடங்கி 5 ஆம் தேதி இரவு 11.35 வரை உள்ளது. மே மாதம் 5 தேதி முழுமையாக சித்ரா பௌர்ணமி என்பதால் 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மே மாதம் 4,5,6,7 ஆகிய நான்கு நாட்களும் அண்ணாமலையார் கோவிலில் அமர்வு தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1800 சிறப்பு பேருந்துகள் சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ளது.
சித்ரா பௌர்ணமி அன்று அண்ணாமலையார் கோவிலுக்குள் பக்தர்கள் விரைந்து சென்று தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது. அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் தரையில் ஏற்படும் வெப்பத்தை தடுக்கும் பொருட்டு பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் கூலிங் பெயிண்ட் அடிக்கவும் மாவட்ட ஆட்சியர் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
