தமிழக அரசியல் களத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் பல்வேறு அதிரடியான கருத்துகளையும் எச்சரிக்கைகளையும் பதிவு செய்துள்ளார்.


இடைத்தேர்தல் சூழலும் தவெகவின் கள பலமும்
அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தல் சூழல் குறித்துப் பேசிய அவர், வழக்கமாக ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும் சூழலைத் தாண்டி, மக்களின் “மறதி மற்றும் ஞாபக சக்தி” காரணமாக இம்முறை தவெகவுக்கு அட்வாண்டேஜ் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்தில் வெற்றி பெற்ற தொகுதிகளை இழந்துவிட்டு, ‘விசில்’ சின்னத்தை நோக்கி நகரும் அரசியல் மாற்றங்கள் நடப்பதாகக் குறிப்பிட்ட அவர், திரையரங்க பாணியிலான பாடல்கள், கொண்டாட்டங்கள் ஆகியவை மக்களின் பழைய அரசியல் புரிதல்களை மறக்கச் செய்வதாகச் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு அவசியம்
ஒருவேளை இத்தேர்தலை ஆளும் திமுக புறக்கணிக்கும் பட்சத்தில், தவெகவை எதிர்கொள்ள அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாமக, பாஜக மற்றும் தேமுதிக ஆகிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் தவெகவை வீழ்த்துவது கடினம் என்றும் அவர் கணித்துள்ளார். விஜய்யின் திரையுலக ஈர்ப்பும் ரசிகர்களின் உணர்ச்சிப்பூர்வ ஆதரவும் தவெகவுக்குத் தேர்தல் களத்தில் சாதகமான பலமாகவே இருக்கும் என்றார்.
“ராவணண்டா ஒத்தையில நிக்கிறேன்” — பிம்பக் கட்டமைப்புகளுக்கு எச்சரிக்கை
“ராவணண்டா ஒத்தையில நிக்கிறேன்” என்பது போன்ற வீராவேசமான பிம்பக் கட்டமைப்புகளைத் (Build-up) தவெக தலைவர் விஜய் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கடுமையாக எச்சரித்தார். கரூர் சம்பவத்திற்குப் பிந்தைய பதற்றமான 3 நாட்களில், விஜய் தரப்பிலிருந்து யார் யாரிடம் உதவி கேட்கப்பட்டது, முன்னாள் முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசப்பட்ட விவரங்கள் என்னென்ன என்பது போன்ற அனைத்து உண்மையும பத்திரிகையாளர்களுக்குத் தெரியும் என்றும், தேவையற்ற செயற்கைப் பிம்பங்களை உருவாக்க முற்பட்டால் அந்த விவரங்கள் வெளிவந்து பிம்பம் உடைந்துவிடும் என்றும் குறிப்பிட்டார்.

அதிமுகவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ அரசியல்
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவின் முக்கியத் தலைவர்களைத் தன்வயப்படுத்தி, அந்த இயக்கத்தையே மெல்ல மெல்லக் காலி செய்யும் ‘ஸ்லோ பாய்சன்’ அரசியலைத் தவெக முன்னெடுத்து வருவதாகக் குற்றம்சாட்டினார். தங்களுக்கு உதவி செய்த அதிமுகவின் முதுகிலேயே குத்தும் வகையில் இந்த நகர்வுகள் அமைந்திருப்பதாகவும், இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன எதிர்வினை ஆற்றப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ரசிகர் அரசியலும் பக்குவமும்
நடிகர் அஜித் குமாரைச் சந்திக்க விஜய் லண்டன் செல்வதாக வரும் தகவல்கள், அஜித் ரசிகர்களின் வாக்குகளைக் கவர்வதற்காகத் திட்டமிடப்படும் ஒரு தேர்தல் உத்தியே ஆகும். அதேவேளையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “சினிமா வேறு, அரசியல் வேறு” என்ற தெளிவான முதிர்ச்சியுடன் தனது ரசிகர்களை வழிநடத்துவதாகவும், அவரது ரசிகர்கள் பக்குவமடைந்துள்ள நிலைக்கு மாறாக, தவெகவைச் சுற்றியிருப்பவர்கள் இன்னும் பக்குவப்படாத சூழலிலேயே இருக்கிறார்கள் என்றும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தனது அலசலின் இறுதியில் சுட்டிக்காட்டினார்.
