நாடு முழுவதும் மதுவிலக்கிற்கு சட்டத்தை கொண்டு வந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல்வாதி போல செயல்பட்டு வருவதாகவும், ராஜ்பவனை அரசியல் பவனாக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றியுள்ளார் என்றும் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டினார். ஆளுநரின் கதாகாலட்சேபம் தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தூதுவர் போலவும், நீட் தேர்வுக்கு ஒரு பி.ஆர்.ஒ. போல ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டினார்.
காந்தி மண்டப வளாகத்தை சுத்தம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு மதுபாட்டில் கிடந்ததாகவு தெரிவித்துள்ளதாகவும், அனைத்து இடங்களிலும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார். சென்னை மாநகராட்சி சுத்தம் செய்யும் பணியை சிறப்பாக செய்து வருவதாகவும், அதிகம் குப்பை சேரும் மெரினாவை கூட முழுவதும் சுத்தம் செய்யும் ஆட்சி தி.மு.க. ஆட்சி என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொள்கை ஒன்றை வகுத்தால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும் என்றும், மதுவை ஒழிக்க தமிழ்நாடு அரசால் மட்டும் முடியாது என்றும் குறிப்பிட்ட அமைச்சர் ரகுபதி, மதுவிலக்கு என்பது இந்தியா முழுவதும் கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசித்து மதுஒழிப்பு தீர்மானத்தை கொண்டு வருவோம் என தெரிவித்த அமைச்சர் ரகுபதி, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 500க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை தடுத்து பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும், பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு, மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரகுபதி கூறினார்.