தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தலைமையிலான புதிய அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது முதல் பட்ஜெட், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது. ஆனால், இந்த பட்ஜெட் சாமானிய மக்களின் நலனைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை என்ற விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளன. இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தனது கடுமையான அதிருப்தியையும் விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளார்.


கல்வி மற்றும் பொதுச்சேவையில் தனியார்மயம்: ஆபத்தான போக்கு
பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்துப் பேசிய கனகராஜ், பள்ளி உட்கட்டமைப்புகளைச் சீரமைக்க அரசு எடுத்துள்ள திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்றபோதிலும், விடுதி (Hostel) போன்ற அத்தியாவசிய சேவைகளை பொதுத்துறைக்கு பதிலாகத் தனியார் பங்களிப்புடன் (PPP மாதிரி) மேற்கொள்ளும் அரசின் அணுகுமுறை மிகவும் ஆபத்தானது” என்று எச்சரித்துள்ளார்.
மேலும், “தனியார் நிறுவனங்களே அரசுத் துறைகளை விடச் சிறப்பாகச் செயல்படும், எனவே அரசுத் துறைகளைக் கலைத்துவிடலாம் எனும் மனநிலை கண்டிக்கத்தக்கது. இது அடிமட்டத்தில் உள்ள சாமானிய மக்களின் நலனை நேரடியாகப் பாதிக்கும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வேலைவாய்ப்பு: தேர்தல் வாக்குறுதி ஏமாற்றமா
தேர்தல் வாக்குறுதிகளில் வேலையில்லா கால நிவாரணமாக மாதம் ரூ. 4,000 வழங்கப்படும் என்று தவெக உறுதியளித்திருந்ததை நினைவுகூர்ந்த அவர், இந்த பட்ஜெட்டில் அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிப்பதாகக் கூறினார்.

முன்னர் அமலில் இருந்த திட்டங்களுக்கே புதிய பெயர்களைச் சூட்டி, அவற்றை ‘வெற்றித் திட்டங்கள்’ என முன்னிறுத்துவது ஏமாற்று வேலையாகும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் யதார்த்தமான பலனைத் தராது; இது அரசு தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலாகும்” என அவர் சாடினார்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டம்: மின்சாரத் துறையில் டிஜிட்டல் சிக்கல்கள்
மின்சாரத் துறையில் கொண்டுவரப்படவுள்ள ‘ஸ்மார்ட் மீட்டர்’ மற்றும் விநியோக முறையில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பது குறித்துப் பேசிய அவர், “இத்தகைய நடவடிக்கைகள் மின்சார விநியோகத்தைத் தனித்தனி தீவுகளாகப் பிரித்துவிடும். பணம் இருப்பவர் மட்டுமே மின்சாரத்தைப் பெற முடியும் என்ற நிலை உருவானால், அது சமூக நீதிக்கே பேரடியாக அமையும்” என கவலை தெரிவித்தார்.
கடன் சுமை வாதம்: பொதுச் சேவைகளைக் குறைக்கும் தந்திரமா?
மாநில அரசின் கடன் சுமை குறித்து அரசு முன்வைக்கும் வாதங்களுக்குப் பதிலளித்த கனகராஜ், “அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே அதிக கடன் வாங்கியுள்ள நிலையில், பொதுநலத் திட்டங்களுக்காக அரசு கடன் வாங்குவதை மட்டும் விமர்சிப்பது சரியல்ல. கடன் சுமை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.”
“ஆனால், அரசு நடத்தும் மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவை நீண்டகாலப் போராட்டங்களின் மூலம் உருவானவை. இவற்றை வெறும் பொருளாதார எண்களாகப் பார்த்து, கடன் அதிகம் எனக் கூறி பொதுமக்களுக்கான சேவைகளைக் குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று வாதிட்டார்.
பெயர் மாற்ற அரசியலா? வரலாறு பேசும்!
“திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவது முக்கியமல்ல; புதிய திட்டங்களை உருவாக்கி மக்களின் மனதில் இடம்பிடிப்பதே உண்மையான மாற்றம்” என்று குறிப்பிட்ட கனகராஜ், “முந்தைய திமுக அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றுவது பாஜக பாணியிலான அரசியலாகும். இது நீண்டகாலத்திற்குப் பலன் தராது. மக்கள் நலனில் உண்மையான அக்கறை காட்டும் திட்டங்களே வரலாற்றில் நிலைத்து நிற்கும்” எனத் தன் பேட்டியை நிறைவு செய்தார்.
