திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதேபோல் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து வாக்கு சேகரித்தார். செங்கம் பகுதியில் பேசிய அவர், 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவை 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்ற ஒன்றிய பாஜக அரசை அப்புறப்படுத்தி, நாட்டில் நிலையான – நீடித்த வளர்ச்சியை உருவாக்க #INDIA கூட்டணி அரசை அமைப்பதே நமது லட்சியம்.
இந்த லட்சிய முழக்கத்தை முன் வைத்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரர் அண்ணாதுரையை ஆதரித்து செங்கம் பகுதியில் இன்று வாக்கு சேகரித்தார். பாஜக -அதிமுகவின் அரசியல் நாடகத்தை அம்பலப்படுத்தி இன எதிரிகளுக்கும் – துரோகிகளுக்கும் மறக்க முடியாத தோல்வியை இந்த தேர்தலில் பரிசளிக்க வேண்டும் என உரையாற்றினார்.