தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலையுடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய ஆளுநரை நியமிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.என்.ரவி 1976 ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார் மற்றும் கேரளா கேடருக்கு ஒதுக்கப்பட்டார். இவர் உளவுத்துறை அதிகாரியாக செயல்பட்டுள்ளார். இவர் மேகாலாய மற்றும் நாகாலாந்து ஆளுநராக 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பிறகு புதிய ஆளுநராக 2021 ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக பணியிடம் மாற்றப்பட்டார்.
ஆரம்பத்தில் தமிழக அரசிற்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே சுமூகமான உறவு நீடித்த நிலையில் நீட் மசோதாவை கிடப்பில் போட்ட பிறகு மோதல் தொடங்கியது. ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதும் இதே போன்று ஆளுநர் ரவியும் அரசு விழாக்களில் தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை கூறுவதும் பட்டமளிப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை பரப்புவது என அரசியல் கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டார்.
அடுத்ததாக தமிழக சட்டப்பேரவையில் தமிழக அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமல் இரண்டு ஆண்டுகள் சட்டசபையில் இருந்து வெளியேறினார். மேலும் தமிழ்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்ற கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ்நாடு என்று அழைத்து வந்ததை தமிழகம் என மாற்ற முயற்சித்தார். இதனால் ஏற்பட்ட கண்டனங்களை தொடர்ந்து அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார்.
இது போன்று பல்வேறு சர்ச்சை கருத்திற்கு சொந்தக்காரரான ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது.
எனவே தமிழகத்திற்கு புதிய ஆளுநரை நியமிப்பதற்கான பணிகளை உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பாஜக மூத்த தலைவர்களை ஆளுநர் பொறுப்பில் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கெஜ்ரீவால் ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு (apcnewstamil.com)
அதே நேரத்தில் ஆளுநர் ரவியின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாமா என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது?