Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட்...

என்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

-

- Advertisement -

​சென்னை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) 3 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் இளம்பெண் விவகாரம் - சுதந்திரமான விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்
​இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் நெய்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் என்.எல்.சி. நிறுவனம், ஒரு நவரத்தின பொதுத்துறை நிறுவனமாகும். மாநில அரசின் முழு ஒத்துழைப்போடும், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடும் பல தசாப்தங்களாக இயங்கி வரும் இந்நிறுவனம், தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் மின்சாரத் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ. 3,670 கோடி லாபம் ஈட்டி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட லாபகரமான பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பது பொதுத்துறை அமைப்புகளைச் சீரழிக்கும் செயலாகும்.

we-r-hiring

ஒன்றிய பா.ஜ.க. அரசு, ‘தேசிய பணமயமாக்கல் திட்டம்’ என்ற பெயரில் நாட்டின் நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போன்ற லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை ஏற்கனவே தனியாருக்குத் தாரை வார்த்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது என்.எல்.சி. நிறுவனத்தின் 3 சதவீதப் பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ளது.

என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என்று வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது ஒரு நல்ல, வரவேற்கத்தக்க அம்சமாகும்.

ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பது, கல்வி மற்றும் மாநில உரிமைகளைப் பறிப்பது, புதிய கல்விக் கொள்கையைத் திணிப்பது மற்றும் நீட் தேர்வு போன்ற விவகாரங்களால் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் முக்கியப் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. பங்குகளையும் விற்பனை செய்யத் துணிவது தமிழக மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

எனவே, என்.எல்.சி.யின் 3 சதவீதப் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களும், நிறுவன ஊழியர்களும் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்ப வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

MUST READ