2025ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா போராளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக வழங்கப்படும் இந்த நோபல் பரிசு மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்களில் விவரங்களை தேர்வுக்குழு வெளியிட்டு வருகிறது.

அதன்படி ஏற்கனவே இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் , வேதியலுக்கான நோபல்பரிசு விஞ்ஞானிகள் சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஓமர் எம்.யாஹி ஆகிய 3 பேருக்கு கூட்டாக பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, 2025ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா போராளி மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்கவும், சர்வாதிகாரத்திற்கு எதிரான அவரது போராட்டங்களுக்காகவும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்தியா- பாகிஸ்தான் மோதல் உள்ளிட்ட 8 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்து வந்தார். அத்துடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “ ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கே நோபல் பரிசு கொடுத்தார்கள்; நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன்” ஆகையால் தனக்கே நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரைகள் செய்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு கிடைக்கும் என பெரும் எதிர்பாப்பு நிலவி வந்தது. ஆனால் தற்போது மரியா கொரேனாவுக்கு வழங்கப்பட்டதால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏமாற்றமடைந்துள்ளார்.