ஈரானுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட முக்கிய தீர்மானத்திற்கு இந்தியாக தனது ஆதரவை வழங்கியுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலைக்கு மத்தியில் இந்த தீர்மானம் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. 
நியூயார்க்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) கொண்டுவரப்பட்ட முக்கிய தீர்மானத்திற்கு இந்தியா தனது ஆதரவை வழங்கியுள்ளது.

தீர்மானத்தின் பின்னணி
வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டான் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைக் கண்டித்து, பஹ்ரைன் இந்தத் தீர்மானத்தை ஐநா-வில் முன்னெடுத்தது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளின் சார்பில் கொண்டுவரப்பட்ட இந்த வரைவுத் தீர்மானம், ஈரானின் “கடுமையான தாக்குதல்கள்” சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும், உலகளாவிய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு
இந்தத் தீர்மானத்தை இந்தியா உட்பட 135 நாடுகள் கூட்டாக வழிமொழிந்தன (Co-sponsor). ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பில் 15 உறுப்பு நாடுகளில் 13 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன. எவரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்
தாக்குதல்களுக்கு கண்டனம்:
பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து சுதந்திரம்:
சர்வதேச கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடுவதாக ஈரான் விடுக்கும் மிரட்டல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வர்த்தக கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இறையாண்மை பாதுகாப்பு:
வளைகுடா நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
உடனடி நிறுத்தம்:
ஈரான் தனது அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களையும், பினாமி அமைப்புகள் (Proxies) மூலமாகச் செய்யும் அத்துமீறல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் கோரியது.
முக்கியத்துவம்
சர்வதேச அளவில் ஒரு தீர்மானத்திற்கு 135 நாடுகள் ஆதரவு தெரிவிப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, வளைகுடா நாடுகளுடனான தனது உறவை மேலும் வலுப்படுத்துவதோடு, பிராந்திய அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைக் காட்டுகிறது.
கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு: $100-ஐத் தாண்டியது பிரெண்ட் (Brent) விலை!
