Homeசெய்திகள்உலகம்சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை: மனித குலத்திற்கு எதிரான குற்ற வழக்கில்...

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை: மனித குலத்திற்கு எதிரான குற்ற வழக்கில் அதிரடி தீர்ப்பு!

-

- Advertisement -

சிரியாவில் பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்து கடந்த 2024 டிசம்பரில் கவிழ்க்கப்பட்ட முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டமஸ்குஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த அதிரடித் தீர்ப்பு சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

வழக்கின் பின்னணி மற்றும் நீதிமன்ற தீர்ப்பு

டமஸ்குஸ் நகரில் உள்ள நான்காவது குற்றவியல் நீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. சிரியாவில் சுமார் 14 ஆண்டுகளாக நீடித்த கொடூர உள்நாட்டுப் போரின் போது அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், படுகொலைகள் மற்றும் கடுமையான சித்ரவதைகளில் ஈடுபட்டதாகப் பஷார் அல்-அசாத் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நேரடியாகவும், தலைமறைவாக உள்ளவர்களுக்காக ‘இன் அப்சென்ஷியா’ (In absentia) முறையிலும் நடத்தப்பட்டது. அரசுத் தொலைக்காட்சி வழியாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த தீர்ப்பு அமர்வில், நீதிபதி ஃபக்ருதீன் அல்-அரியான் தலைமையிலான அமர்வு அசாத்திற்கு மரண தண்டனையை அறிவித்தது.

நாட்டைவிட்டுத் தப்பியோட்டம் மற்றும் தற்போதைய நிலை

கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் கிளர்ச்சியாளர் படைகள் டமஸ்குஸைக் கைப்பற்றியதை அடுத்து, பஷார் அல்-அசாத் தனது குடும்பத்தினருடன் நாட்டைவிட்டுத் தப்பியோடி மாஸ்கோவில் தஞ்சம் புகுந்தார். இதனால் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதே வழக்கில் அவருடன் சேர்த்து அவரது தம்பி மஹர் அல்-அசாத்திற்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரும் தற்போது ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், முன்னாள் ஆட்சியின் கீழ் தெற்கு டெரா (Daraa) மாகாணத்தில் அரசியல் பாதுகாப்புப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய அசாத்தின் உறவினர் ஆதேஃப் நஜீப் (Atef Najib) கைது செய்யப்பட்டு நேரில் விசாரிக்கப்பட்டார். அவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

சிரிய உள்நாட்டுப் போரின் கோரமுகம்

கடந்த 2011-ஆம் ஆண்டு அரபு வசந்தத்தின் தொடர்ச்சியாகச் சிரியாவில் ஜனநாயகத்தைக் கோரி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். டெரா மாகாணத்தில் சுவரில் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்களை எழுதிய சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குள்ளக்கப்பட்ட விவகாரம் மிகப்பெரிய எழுச்சிக்கு வித்திட்டது. அதனைத் தொடர்ந்து அரசு நடத்திய கொடூரமான ஒடுக்குமுறை காரணமாகப் போராட்டம் 14 ஆண்டுகள் நீடித்த கொடூர உள்நாட்டுப் போராக மாறியது. இந்த நீண்ட போரில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்; கோடிக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறினர்.

சிரியாவில் புதிய இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், முந்தைய ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்கள் மீது நடத்தப்படும் முதல் கடுமையான நீதித்துறை நடவடிக்கை இதுவாகும். ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்துள்ள பஷார் அல்-அசாத்தை நாடு கடத்தக் கோரி புதிய அரசாங்கம் வலியுறுத்தி வரும் சூழலில், இந்த மரண தண்டனை தீர்ப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

MUST READ