லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய உக்கிரமான வான்வழித் தாக்குதல்களில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த தாக்குதல்கள் பெய்ரூட்டின் இதயப்பகுதியாகக் கருதப்படும் பாஷுரா (Bachoura) மற்றும் ஸுகாக் அல்-ப்லாட் (Zuqaq al-Blat) ஆகிய மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன.
லெபனான் சுகாதார அமைச்சகத்தின் முதற்கட்ட தகவலின்படி, இன்றைய தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 24-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாஷுரா பகுதியில் உள்ள ஒரு உயரமான குடியிருப்பு கட்டிடம் ஏவுகணைத் தாக்குதலால் சில நொடிகளில் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு இஸ்ரேலிய ராணுவம் சில குறிப்பிட்ட கட்டிடங்களை காலி செய்யுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், பல இடங்களில் முன்னறிவிப்பு இன்றி தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசிய நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதலை பெய்ரூட்டின் மையப்பகுதிக்கு விரிவுபடுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் தீவிரமடைந்துள்ள இந்த மோதலில், லெபனானில் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். பெய்ரூட்டின் தெற்குப் புறநகர் பகுதிகளில் இருந்து தப்பி வந்த மக்கள் தங்கியிருந்த இடங்களுக்கு அருகிலேயே இந்த புதிய தாக்குதல்கள் நடந்துள்ளது மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. மீட்புப் படையினர் தற்போது கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
