
இங்கிலாந்து நாட்டின் மன்னராக முடி சூட்டப்படுகிறார் இளவரசர் சார்லஸ் . இதனால் லண்டன் தலைநகரில் கோலாகல விழா நடைபெறுகிறது. 70 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அந்த பாரம்பரிய விழா நடைபெறுகிறது.

இங்கிலாந்து நாட்டை 70 ஆண்டு காலம் ஆட்சி செய்து வந்தார் ராணி இரண்டாம் எலிசபெத். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று தனது 96 வது வயது காலமானார். அதன் பின்னர் ராணி இரண்டாம் எலிசபத் மூத்த மகனும் இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். இவர் மூன்றாம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார் .
ராணி எலிசபத்தின் மறைவுக்கு பின்னர் மன்னராக சார்லஸ் ஆன போதும் அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்து வந்தது . இந்த நிலையில் மே 6ஆம் தேதியான இன்று மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே அறிவித்திருந்தது. இந்த பாரம்பரிய விழா பக்கிங்காம் அரண்மனையில் இருந்து பெஸ்ட்மின்ஸ்டர் அபே வரையில் ஊர்வலத்துடன் தொடங்குகிறது.
மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் குளிர்சாதன வசதியும் மின்சாரத்தால் இயங்கும் ஜன்னல்களும் கொண்ட சிறிய சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்கள். தேவாலயத்திற்குள் நுழைந்தவுடன் விழா தொடங்க இருக்கிறது. 700 ஆண்டுகால பழமையான இருக்கையின் பின்னால் நின்று கொண்டு கேன்டர்பரி ஆர்ச் பிஷப் அரசரை அங்கீகரித்து ஒரு அறிவிப்பு வெளியிடுவார். அப்போது, ‘கடவுளே மன்னரை காப்பாற்று’ என்று அனைவரும் முழக்கங்களை எழுப்புவார்கள். ராணுவ இசை மற்றும் வாத்திய கருவிகள் அப்போது முழங்கும். அதன் பின்னர் சட்டத்தையும் இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக மன்னர் மூன்றாம் சார்லஸ் உறுதிமொழி எடுப்பார் .

பின்னர் மன்னர் அந்த இருக்கையில் அமர்ந்ததும், அவரது வழக்கமான ஆடைகள் அகற்றப்படும். அப்பொழுது பார்வையாளர்களிடமிருந்து தங்க இழைகளால் தயாரிக்கப்பட்ட திரை மூலம் மறைக்கப்படும். மன்னரின் தலை உடல் பகுதியில் புனித எண்ணெய் தேய்த்து அபிஷேகம் செய்யப் செய்வார்கள். இது மன்னருக்கென்றே தயாரிக்கப்படும் எண்ணெய். அதன் பின்னர் மன்னரிடம் மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கின்ற வகையில் அரச குடும்ப புனித உருண்டை அளிக்கப்படும். அரசு அதிகாரங்களை அளிக்கும் செங்கோல் வழங்கப்படும் . இறுதியாக ஆர்ச் பிஷப் மன்னரின் தலையில் கிரீடத்தை சூட்டுவார். அதன் பின்னர் இருக்கையில் இருந்து எழுந்து அரியனை நோக்கி செல்வார் மன்னர். அங்கே உரிய மரியாதை அளிக்கப்பட்டு அவர் அரியணையில் அமர வைக்கப்படுவார். அதே போல் அரசரின் மனைவி கமீலாவுக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு தலையில் கிரீடம் சூட்டப்படும்.
அதன் பின்னர் மன்னரும் ராணியும் தங்க மூலம் பூசப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்று மீண்டும் பக்கிங்காம் அரண்மனைக்கு செல்வார்கள்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் முடி சூட்டு விழாவில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் என்று சுமார் 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மனைவி ஜில் பைடன் பங்கேற்க இருக்கிறார்.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிச்சிட்டு விழா கடந்த 1953 ஆம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. அதன் பின்னர் 70 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த பாரம்பரிய விழா இன்று நடைபெறுகிறது.


