மெட்டா நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இரண்டாம் கட்டமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் பெரும் பண்காரரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு டிவிட்டரை வாங்கியதுமே முதல் நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் 50 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். டிவிட்டரை தொடர்ந்து கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், யாஹூ, ஜூம் என பல்வேறு பெரும் நிறுவனங்களும் பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.
அந்தவகையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவும் அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. பேஸ்புக் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இல்லாத வகையில், கடந்த நவம்பர் மாதத்தில் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியது மெட்டா நிறுவனம். பேஸ்புக்கில் விளம்பர வருவாய் குறைந்து வருவதால் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் மெட்டா நிறுவனம், டிவிட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைதளத்தை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இரண்டாம் கட்டமாக மெட்டா நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. பொறியாளர் அல்லாத பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், செயல்பாட்டில் இருக்கும் பல்வேறு குழுக்களை கலைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.