அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் இரு நாடுகளும் 14 அம்சங்கள் கொண்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 14 அம்ச ஒப்பந்தங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பல நாட்களாக நீடித்துவந்த அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் இரு நாடுகளும் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துதல், பொருளாதாரத் தடைகளை தளர்த்துதல், ஹார்முஸ் நீரிணையை திறந்து வைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் அனைத்து முனைகளிலும் நடைபெற்று வந்த ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன. இனி ஒருவருக்கொருவர் எதிராக போர் நடவடிக்கைகள் அல்லது அச்சுறுத்தல்களில் ஈடுபட மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் பரஸ்பர இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து, உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யாத கொள்கையை பின்பற்ற ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், 60 நாட்களுக்குள் நிரந்தர அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாட்களுக்குள் ஈரானைச் சுற்றியுள்ள தனது ராணுவப் படைகளை திரும்பப் பெறவும், கடற்படை முற்றுகைகளை நீக்கவும் சம்மதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் போர் முன் இருந்த நிலைக்கு கடல்சார் வர்த்தகப் போக்குவரத்தை மீட்டெடுக்க வழிவகை செய்யப்படும்.
உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை வழியாக 60 நாட்களுக்கு அனைத்து நாடுகளின் வர்த்தகக் கப்பல்களும் எந்தவித கட்டணமோ தடையோ இன்றி பாதுகாப்பாகச் செல்ல ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையின் எதிர்கால நிர்வாகம் குறித்து ஈரான், ஓமான் மற்றும் வளைகுடா நாடுகள் இணைந்து ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளன. இது பிராந்திய கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட ஈரானின் பொருளாதாரத்தையும் உள்கட்டமைப்பையும் மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் குறைந்தபட்சம் 300 பில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.28 லட்சம் கோடி நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த ஐ.நா. தீர்மானங்கள், அணுசக்தி கண்காணிப்பு அமைப்புகளின் கட்டுப்பாடுகள் மற்றும் பல்வேறு பொருளாதாரத் தடைகள் படிப்படியாக நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை உருவாக்கவோ அல்லது பெறவோ மாட்டோம் என்ற தனது நிலைப்பாட்டை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்புகளை சர்வதேச அணுசக்தி அமைப்பின் கண்காணிப்பின் கீழ் கையாள்வதற்கும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை தற்போதைய நிலையைத் தொடர அமெரிக்காவும் ஈரானும் சம்மதித்துள்ளன. அதன்படி, ஈரான் தனது அணுசக்தி திட்ட விரிவாக்கத்தை நிறுத்திவைக்கும் நிலையில், அமெரிக்கா புதிய தடைகள் அல்லது கூடுதல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளாது.
ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தேவையான வங்கி, காப்பீடு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கும் அமெரிக்கா விலக்குகள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் சொத்துகள் மற்றும் நிதிகளையும் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை கண்காணிக்க இரு நாடுகளும் இணைந்து ஒரு நிர்வாக கண்காணிப்பு அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளன. முக்கிய அம்சங்கள் நடைமுறைக்கு வந்த பின், நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டு, அது ஐ.நா. பாதுகாப்பு சபையின் அங்கீகாரத்திற்கும் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலக பொருளாதாரத்திற்கு கிடைக்கும் மிகப்பெரிய உடனடி பலனாக, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் நீரிணை மீண்டும் தடையின்றி செயல்படுவது பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் – பாகிஸ்தானுக்கு குவியும் பாராட்டு
