இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர் பயனற்றது, நியாயமற்றது மற்றும் பகுத்தறிவு அடிப்படையில் தவறானது என்று விமர்சித்துள்ளார்.


தி வொயர் என்கிற ஆங்கில ஊடத்தின் ஆசிரியர் கரண் தாப்பர் அவர்கள் இஸ்ரேல் நாட்டின் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி என்பவரிடம் நடத்திய நேர்காணலின் தமிழாக்கம்.
ஈரான் ஓர் அச்சுறுத்தலா? என்ற கேள்விக்கு பதிலளித்த கிதியோன் லெவி, அச்சுறுத்தல் என்பது வெறும் வார்த்தைகள் மட்டுமே. ஒரு நாட்டை ‘அழிக்கும் அளவிற்கு அச்சுறுத்தலாக’ (Existential threat) மாற்றிவிடாது என்று லெவி கூறுகிறார். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லாதவரை, அது இஸ்ரேலுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ளாா்.
மேலும் இஸ்ரேல் எப்போதும் ராஜதந்திரத்தை விட போரையே முதல் தேர்வாகக் கொள்கிறது. 93% இஸ்ரேலியர்கள் இந்தப் போரை ஆதரிப்பது ஒரு ஜனநாயக நாட்டில் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஈரானியத் தலைவர்கள் கொல்லப்படுவதை லெவி ‘கொலைகள்’ என்றே அழைக்கிறார். ஒரு குற்றக் கும்பல் திட்டமிட்டுச் செய்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை என்றும், இத்தகைய கொலைகள் எதிர்தரப்பை இன்னும் தீவிரமாக்குமே தவிர தீர்வைத் தராது என்றும் அவர் எச்சரிக்கிறார்.

இஸ்ரேலியர்கள் தங்களை கடவுளால் “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்” என்று கருதுவதால், தங்களுக்குப் பன்னாட்டுச் சட்டங்கள் பொருந்தாது என்றும், தங்களின் செயல்களை விமர்சிப்பவர்கள் அனைவரையும் ‘யூத எதிர்ப்பாளர்கள்’ (Anti-semites) என்று முத்திரை குத்துவதாகவும் அவர் கூறுகிறார்.
இந்தப் போரினால் இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவை இழக்க நேரிடும். அமெரிக்காவை போருக்குள் இழுத்துவிட்டதாக இஸ்ரேல் மீது பழி சுமத்தப்படும்போது, அது இஸ்ரேலுக்கு உண்மையான ஆபத்தாக முடியும்.
இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு இஸ்ரேலின் ஜனநாயகத்தை அழித்து, ஒரு சர்வாதிகாரப் போக்கை உருவாக்கியவர் என்று லெவி கடுமையாக சாடுகிறார். வரலாற்றில் அவர் இஸ்ரேலைச் சீரழித்தவராகவே நினைவுகூரப்படுவார் என்கிறார்.
இஸ்ரேலிய ஊடகங்கள் இராணுவத் தணிக்கையை விட ‘சுயத் தணிக்கை’ (Self-censorship) செய்துகொள்கின்றன. காசாவில் நடக்கும் பேரழிவுகளை இஸ்ரேலிய மக்களுக்குத் தெரியாமல் அவை மறைக்கின்றன என்று அவர் குற்றம் சுமத்துகிறார்.
![]()
கேள்வி: கரண் தாப்பர்: இந்தப் போர் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இதன் முடிவு என்னவாக இருக்கும்?
பதில் -கிதியோன் லெவி: இது எங்கே போகிறது என்று யாருக்கும் தெரியாது, இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கும் தெரியாது. ஈரானின் ஆட்சி மாற்றமோ அல்லது அணு ஆயுதங்களை ஒழிப்பதோ தற்போதைக்குச் சாத்தியமற்ற இலக்குகள். இந்தப் போரினால் ஈரானிய மக்கள் தங்கள் அரசாங்கத்திற்குப் பின்னால் இன்னும் உறுதியாக ஒன்றிணைவார்கள்.
கேள்வி -கரண் தாப்பர்: அப்படியானால் எதிர்காலம் இருண்டதாகத் தெரிகிறதா?
பதில் -கிதியோன் லெவி: ஆமாம், பகுத்தறிவு ரீதியாகப் பார்த்தால் எந்த ஒரு நம்பிக்கையான முடிவும் தெரியவில்லை. இஸ்ரேலின் இளைய தலைமுறை இன்னும் தீவிரமான தேசியவாதப் போக்கைக் கொண்டுள்ளனர். அதனால் அவர்கள் இந்த போரை ஆதரித்து வருகிறார்கள். ஏதேனும் ஒரு அதிசயம் நடந்தால் ஒழிய, மத்திய கிழக்கிற்கும் இஸ்ரேலுக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தைக் கணிப்பது கடினம் என்றார்.
டிரம்ப் ஒரு மடிநாய், நெதன்யாகு அவரை ஆட்டிப்படைக்கிறார்’ – வரலாற்று அறிஞர் அவி ஸ்லைம் அதிரடி!
