ஜப்பானில் மகாத்மா காந்தி சிலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பானின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.
சிலை திறப்பு விழாவின் போது, பிரதமரின் சிறப்பு ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நகாதானி ஜென், ஹிரோஷிமா நகர மேயர் கசுமி மட்சுயி, ஹிரோஷிமா நகர சட்டமன்றத்தின் சபாநாயகர் தட்சுனோரி மோட்டானி, ஹிரோஷிமாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், இந்திய சமூக உறுப்பினர்கள், ஜப்பானில் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Prime Minister Shri Narendra Modi unveils a bust of Mahatma Gandhi in Hiroshima, Japan.#Japan #NarendraModi #PMOIndia pic.twitter.com/7gj1ter1Yf
— Smita Wagh (@SmitaWagh_) May 20, 2023

ஹிரோஷிமாவில் 19 முதல் 21 ந்தேதி வரை நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கான பிரதமர் மோடி ஜப்பானுக்கு சென்றுள்ளார். இந்தியா மற்றும் ஜப்பான் இடையே நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக ஹிரோஷிமா நகருக்கு மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலை இந்திய அரசால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 42 அங்குல உயரமுள்ள வெண்கல மார்பளவுச் சிலை பத்ம பூஷன் விருது பெற்ற ராம் வஞ்சி சுதாரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணுகுண்டு நினைவு சின்னமான கட்டிடத்துக்கு அருகில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை, பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
சிலை திறப்பு விழாவுக்கு பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தினார். ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டிற்கு இடையே இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் பிரதமர் கிஷிடா இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து, அவர்களது இரண்டாவது சந்திப்பு இதுவாகும். மார்ச் மாதம் தம்மால் பரிசாக வழங்கப்பட்ட போதி மரக்கன்றுகளை ஹிரோஷிமாவில் நட்டதற்காக ஜப்பான் பிரதமர் கிஷிடாவிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.