ஈரானின் மிகப்பெரிய எரிவாயு கிடங்கான தெற்கு பார்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தங்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்றும், அது குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரியாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைதளப் பக்கமான ‘Truth Social’-இல் இது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப்:
”மத்திய கிழக்கில் நடக்கும் நிகழ்வுகளால் கோபமடைந்துள்ள இஸ்ரேல், ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு தளத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த குறிப்பிட்ட தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு எதுவும் தெரியாது. இதில் கத்தார் நாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.”

இந்தத் தாக்குதலில் அந்த எரிவாயு தளத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 18 அன்று, உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான தெற்கு பார்ஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது அண்டை நாடான கத்தாரின் ‘ராஸ் லாஃபான்’ (Ras Laffan) எரிவாயு மையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. கத்தார் மீது ஈரான் நடத்திய இந்தத் தாக்குதல் “நியாயமற்றது” என்று ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இனிமேல் இஸ்ரேல் ஈரானின் தெற்கு பார்ஸ் மீது தாக்குதல் நடத்தாது என்று உறுதியளித்த ட்ரம்ப், அதே சமயம் ஈரானுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
ஈரான் மீண்டும் கத்தார் நாட்டின் எரிவாயு நிலையங்களைத் தாக்கினால், அமெரிக்கா நேரடியாகத் தலையிடும்.
“ஈரான் மீண்டும் கத்தாரைத் தாக்கினால், இஸ்ரேலின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும், தெற்கு பார்ஸ் எரிவாயு தளம் முழுவதையும் அமெரிக்கா தரைமட்டமாக்கும். ஈரான் இதுவரை பார்த்திராத அளவு வலிமையுடன் அந்தத் தாக்குதல் இருக்கும்,” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
பொருளாதார தாக்கம்
இந்தத் தாக்குதல்களால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஈரானின் எரிவாயு உற்பத்தியில் 70% முதல் 80% வரை இந்தத் தெற்கு பார்ஸ் தளத்திலிருந்தே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெய்ரூட்: இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தரைமட்டமான கட்டிடங்கள்; உருக்குலைந்த லெபனான் தலைநகர்
