அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள் மூன்று வாரங்களை நிறைவு செய்து 22-வது நாளை எட்டியுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எவ்வித அறிகுறியும் தென்படாத சூழலில், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தனது ராணுவ வலிமையை அமெரிக்கா மேலும் அதிகரித்து வருகிறது.
சுமார் 2,500 கடற்படை வீரர்கள் மற்றும் மூன்று போர்க்கப்பல்களை மேற்கு ஆசியாவிற்கு அமெரிக்கா கூடுதலாக அனுப்பி வைக்கிறது. ஏற்கனவே அமெரிக்காவின் தேசியக் கடன் 39 டிரில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், இந்தப் போருக்காக மேலும் 200 பில்லியன் டாலர்களை ஒதுக்குமாறு பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கூடுதல் நிதியைப் பெறுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) ஒப்புதல் அவசியமாகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், ராணுவ நடவடிக்கைகளைக் குறைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், களத்தில் கூடுதல் படைகளை அனுப்பியும் வருகிறார்.

இதற்கிடையில், ஈரானின் முக்கிய எரிசக்தி ஆதாரமான எரிவாயு வயல்கள் (Gas fields) மீதான தாக்குதல்கள் தொடர்பாக முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதிபர் டிரம்பின் வேண்டுகோளை ஏற்று, ஈரானியர்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் எரிவாயு வயல் மீதான தாக்குதலை நிறுத்தப் போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த எரிவாயு வயல் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக, அண்டை நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஈரான் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்கவும் டிரம்ப் நிர்வாகம் தற்போது முடிவெடுத்துள்ளது.
மூன்று வாரங்களாக நீடிக்கும் இந்தப் போரில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ஈரானில் 1,300-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
லெபனானில் 1,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அதேபோன்று
இஸ்ரேலில் 15 பேர்
அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் உயிரிழப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் மற்றும் ஈரானில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர். போர் தீவிரமடைந்து வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஈரானின் அறிவிப்பால் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஜப்பான்: ஹார்முஸ் ஜலசந்தியில் பச்சைக்கொடி!
