பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சர்வதேச நிறுவனமான ‘டைம் அவுட் குரூப்’ (Time Out Group), 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் (World’s Happiest Cities 2026) பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், உலகின் மிகச் சிறந்த 20 நகரங்களின் வரிசையில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்ப்பூர் நகரம் 6-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நகரம் ஜெய்ப்பூர் என்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

முன்னணியில் உள்ள பிற நகரங்கள்
- இப்பட்டியலில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் நகரங்கள்,
- முதலிடம்: பிரிட்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாத் (Bath) நகரம்.
- இரண்டாமிடம்: மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் பனாமா நகரம் (Panama City).
- ஆறாமிடம்: இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம் என அழைக்கப்படும் ஜெய்ப்பூர் (Jaipur).
ஜெய்ப்பூர் இந்த இடத்தைப் பிடிக்கக் காரணம் என்ன?
ஜெய்ப்பூர் உலகின் மகிழ்ச்சியான நகரங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்வரும் முக்கியக் காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன, உலகப் புகழ்பெற்ற அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் மன்னர் காலத்துக் கட்டடக்கலை ஆகியவை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் மனநிறைவை வழங்குகின்றன. ‘அதிதி தேவோ பவ’ (விருந்தினரே கடவுள்) என்ற பண்பாட்டிற்கு ஏற்ப, அங்குள்ள மக்களின் அன்பான அணுகுமுறையும் விருந்தோம்பலும் நகரின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றன. வண்ணமயமான சந்தைகள், சுவையான பாரம்பரிய உணவுகள் மற்றும் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச இலக்கியத் திருவிழாக்கள் நகரை எப்போதும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கின்றன. நவீன வசதிகளுடன் கூடிய அதே வேளையில், மன அழுத்தமில்லாத மற்றும் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இங்கு நிலவுகிறது.
இந்தியாவிற்கு கிடைத்த அங்கீகாரம்
உலகளாவிய அளவில் லண்டன், பாரிஸ், டோக்கியோ போன்ற அதிநவீன நகரங்கள் போட்டியிட்ட சூழலில், பாரம்பரியமும் நவீனமும் இணைந்த இந்திய பண்பாட்டின் அடையாளமான ஜெய்ப்பூர் 6-வது இடத்தைப் பிடித்திருப்பது, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை மேலும் உய உயர்த்தியுள்ளது.
