106 – இரவு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

106 - இரவு கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1051. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
          அவர்பழி தம்பழி அன்று

கலைஞர் குறல் விளக்கம் – கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.

we-r-hiring

1052. இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
          துன்பம் உறாஅ வரின்

கலைஞர் குறல் விளக்கம் – வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.

1053. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
          றிரப்புமோர் ஏஎர் உடைத்து

கலைஞர் குறல் விளக்கம் – உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமை யுடையதே யாகும்.

1054. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
          கனவிலும் தேற்றாதார் மாட்டு

கலைஞர் குறல் விளக்கம் – இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடைய தாகும்.

1055. கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
          றிரப்பவர் மேற்கொள் வது

கலைஞர் குறல் விளக்கம் – உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.

1056. கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
          யெல்லா மொருங்கு கெடும்.

கலைஞர் குறல் விளக்கம் – இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களை  கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.

1057. இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
          உள்ளுள் உவப்ப துடைத்து

கலைஞர் குறல் விளக்கம் – இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.

1058. இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
          மரப்பாவை சென்றுவந் தற்று

கலைஞர் குறல் விளக்கம் – வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும். மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.

1059. ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
          மேவார் இலாஅக் கடை

கலைஞர் குறல் விளக்கம் – இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.

1060. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
          தானேயும் சாலும் கரி

கலைஞர் குறல் விளக்கம் – இல்லை என்பவரிடம் இரப்பவன் கோபம் கொள்ளக் கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.

MUST READ