
1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது
கலைஞர் குறல் விளக்கம் – ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.

1302. உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்
கலைஞர் குறல் விளக்கம் – ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும். அந்தக் கால அளவு டித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்.
1303. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்
கலைஞர் குறல் விளக்கம் – ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது. ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.
1304. ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று
கலைஞர் குறல் விளக்கம் – ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.
1305. நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து
கலைஞர் குறல் விளக்கம் – மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்.
1306. துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று
கலைஞர் குறல் விளக்கம் – பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.
1307. ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று
கலைஞர் குறல் விளக்கம் – கூடி முயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு.
1308. நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி
கலைஞர் குறல் விளக்கம் – நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?
1309. நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது
கலைஞர் குறல் விளக்கம் – நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்: அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்.
1310. ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா
கலைஞர் குறல் விளக்கம் – ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.


