721. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
கலைஞர் குறல் விளக்கம் – சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவை யிலி ருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.
722. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்
கலைஞர் குறல் விளக்கம் – கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்.
723. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர்
கலைஞர் குறல் விளக்கம் – அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.
724. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்
கலைஞர் குறல் விளக்கம் – அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
725. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு
கலைஞர் குறல் விளக்கம் – அவையில் பேசும்பொழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும் தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.
726. வாளொடன் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு
கலைஞர் குறல் விளக்கம் – கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.
727. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்
கலைஞர் குறல் விளக்கம் – அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன். என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.
728. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்
கலைஞர் குறல் விளக்கம் – அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் காற்றிருந்தாலும் பயன் இல்லை.
729. கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்
கலைஞர் குறல் விளக்கம் – ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.
730. உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்
கலைஞர் குறல் விளக்கம் – தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.