

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளின் செல்போன்கள் கூவம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 15 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கட்சிக்கு கலங்கமும் அவப்பெயரும் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதாக அதிமுகவில் இருந்து நேற்று மாலை நீக்கப்பட்டார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கவுன்சிலர் ஹரிதரனிடம் விசாரணை நடத்தியதில், கொலையாளிகளின் செல்போன்களை கூவம் ஆற்றில் வீசியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசிய கொலையாளிகளின் செல்போன்களை ஸ்கூபா டைவிங் வீரர்கள் மூலம் தேடி தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் வழக்கறிஞர்கள் அருள் மற்றும் ஹரிஹரன் ஆகியோருக்கு நெருங்கிய நண்பர் ஹரிதரன். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த பின் திமுக வழக்கறிஞர் அருள் 6 செல்போன்களை ஹரிதரனிடம் கொடுத்துள்ளார்.

அருள் கைது செய்யப்பட்ட பிறகு ஹரிதரனை தொடர்பு கொண்ட வழக்கறிஞர் ஹரிஹரன், அருள் கொடுத்த செல்போன்களை யார் கண்ணிலும் படாதவாறு உடைத்து வீசி விடச் சொல்லி உள்ளார். இதையடுத்து ஹரிதரன் அனைத்து செல்போன்களையும் உடைத்து வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசி உள்ளார். இதனைத்தொடர்ந்து வழக்கறிஞர் ஹரிஹரனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து, அதில் கிடைத்த தகவல் அடிப்படையில் நேற்று அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஹரிதரனை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் ஹரிதரன் கொடுத்த தகவலின் பேரில், வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தீயணைப்புத் மற்றும் மீட்புத் துறையின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி செல்போன்களை கைப்பற்றி உள்ளனர்.
