ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. கூடுதல் வாக்காளர்கள் இருந்ததால் டோக்கன் வழங்கப்பட்டு ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் மட்டும் இரவு 9:30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 238 வாக்கு சாவடிகளிலும் 1430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 386 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 310 டிவி பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தேர்தலில் 74.79% சதவீத வாக்காளர்கள், அதாவது 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தினர்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து வாக்கு பதிவு இயந்திரங்கள் மண்டலம் வாரியாக வாகனங்களில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன. அங்கு அவை தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் இறக்கி வைக்கப்பட்டு சரி பார்க்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் அனைத்தும் விடிய விடிய நடைபெற்றன. இதன் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் மற்றும் வேட்பாளர்கள் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி, “வாக்குப்பதிவு முடிவடைந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைய விதிமுறைகள் படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது அவை திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் சிசிடிவி கேமராக்கள் ஸ்ட்ராங் ரூம் மற்றும் அதற்குச் செல்லும் வழிகள் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றது. வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் வந்து பார்வையிட்டு செல்லும் அளவிற்கு வெளிப்படை தன்மையுடன் சிசிடிவி காட்சிகள் இருக்கும்.
வாக்கு எண்ணிக்கையை பொறுத்த வரைக்கும் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 238 வாக்குச்சாவடிகள் என்பதால் 15 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை தாமதமாகுமா என்பதை தற்போது சொல்ல முடியாது. 77 வேட்பாளர்கள் இருப்பதால் கூடுதலாக நேரம் ஆகும், ஆனால் மிகவும் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இரண்டு அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது” எனக் கூறினார்.
