
சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உணவக உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் (Commercial LPG) விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஸ்டார் ஹோட்டல்கள் முதல் டீக்கடைகள் வரை ஸ்தம்பித்துள்ளன..
பல உணவகங்கள் மூடப்படும் நிலையை எட்டியுள்ளன.. மேலும் பல உணவகங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு குறைந்த அளவிலான உணவு வகைகளே வழங்கப்படும் என்றும் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.. சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் தேநீர், தோசை, வடை உள்பட பல உணவுகள் நிலைமை சீராகும் வரை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவுகிறது.
சிலிண்டர் தாடுப்பாட்டினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலிண்டர் விநியோகம் சீராகவில்லை என்றால், இன்னும் 5 முதல் 6 நாட்களில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாகவும், கள்ளச்சந்தையில் அதிக விலைக்குச் சிலிண்டர்கள் விற்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில் , உணவக உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அனைத்து உணவக உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிலிண்டருக்கு மாற்றாக வேறு வழியை கையாள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனும் ஆலோசிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நேற்றைய தினம் மாநிலத்தின் எரிவாயு இருப்பு நிலை மற்றும் உணவகங்களுக்குத் தடையின்றி சிலிண்டர் வழங்குவது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதில் எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு தொழிற்சாலைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், உணவகங்கள் மூடப்படுவதைத் தவிர்க்கத் தேவையான அனைத்து மாற்று விநியோக ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும், கேஸ் தட்டுப்பாட்டால் சமையலுக்கு மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தும் உணவகங்களுக்குத் தேவையான கூடுதல் மின்சாரத்தை வழங்க மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் வலியுறுத்தினார்.
தற்போது தமிழகத்தில் சுமார் 20 நாட்களுக்குத் தேவையான எரிவாயு கையிருப்பு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வீட்டு உபயோகச் சிலிண்டர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வணிகச் சிலிண்டர் விநியோகத்தை முறைப்படுத்த எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
