கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “43 பிள்ளைகள் மருத்துவமனைப் படுக்கைகளில் சிகிச்சை பெறும் காட்சியை காண்பதற்கு நெஞ்சம் பதைக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தும், சில ஊடகங்கள் இச்செய்தியை வெளியிடாமல் இருந்தது வருத்தமளிக்கிறது. மாணவர்கள் உயிர் விஷயத்தில், சத்துணவு போன்ற ஒரு முக்கியமான திட்டத்தில், எப்படி ஒரு அரசு தொடர்ச்சியாக அலட்சியப் போக்கு காட்ட முடியும்?
2021 முதல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தரமற்ற அரசுப்பள்ளி உணவால் பாதிக்கப்பட்டிருக்க, அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலையோ அக்கறையோ இல்லாமல், “சாம்பார் டேஸ்ட் எப்படி?” என மேடை போட்டு வெற்று விளம்பரம் செய்த வெட்கங்கெட்ட அரசு தானே இந்த ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு? பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை இந்த திமுக அரசு உறுதி செய்திட வேண்டும். பள்ளி மாணவர்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கூட அக்கறையற்ற இந்த திமுக-வை, ஆட்சிக்கு அப்பால், அக்கரையில் மக்கள் சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

