தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், நவோதயா பள்ளிகள் நடைமுறையில் இருக்கும் மும்மொழிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், அது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் இருமொழிக் கொள்கைக்கு எதிரானதாகும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி ஆகிய மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் நீண்ட காலமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், மும்மொழிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட நவோதயா பள்ளிகளை மாநிலத்தில் அறிமுகப்படுத்துவது கல்வி கொள்கைக்கு முரண்படுவதாக தமிழ்நாடு அரசு தனது விளக்கத்தில் கூறியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசின் மாதிரி பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 38 உறைவிட வசதியுடன் கூடிய அரசின் மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மாணவர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் தரமான கல்வி மற்றும் அதிநவீன வசதிகளுடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரி பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் உயர்கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்து வருகின்றனர். குறிப்பாக, 2024–2025 கல்வியாண்டில் மட்டும் 1,340 மாணவர்கள் அகில இந்திய அளவிலான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயின்றுள்ளனர். மேலும் பல மாணவர்கள் அரசின் முழு கல்வி உதவித்தொகையுடன் சர்வதேச அளவிலான கல்வி நிறுவனங்களிலும் பயின்று வருகின்றனர். இது தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை வெளிப்படுத்துகிறது என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் நவோதயா வித்யாலயா பள்ளிகள் இல்லாமலேயே தரமான கல்வி வழங்கப்பட்டு வருவதாகவும், மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதில் மாநில அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே மாநிலத்தில் அரசின் மாதிரி பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அதேபோன்ற அமைப்பில் உள்ள நவோதயா பள்ளிகளை புதிதாக தொடங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மாநில சுயாட்சியை பாதுகாக்கும் வகையில் தற்போது உள்ள கல்வி கட்டமைப்பை பயன்படுத்தியே தேசிய கல்வி இலக்குகளை அடைய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கல்விக்கான நிதி தொடர்பாகவும் மாநில அரசு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. சமகிர சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய 3,548.22 கோடி ரூபாய் கல்வி நிதி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும், அந்த நிதியை விரைவாக வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசு தனது நிதி பங்களிப்பை விடுவிக்காததால், மாநிலத்தில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு பராமரிப்பு, மாணவர் நலத்திட்டங்கள், ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட பல கல்வி தொடர்பான செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
எனவே, புதிய கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கு பதிலாக, மத்திய அரசு ஏற்கனவே உறுதியளித்த கல்வி நிதியை முழுமையாக வழங்க வேண்டும். அந்த பொறுப்புகளை நிறைவேற்றாமல் கூடுதல் நிறுவனங்களை தொடங்குவது நிதி ரீதியாக மேலும் சிக்கல்களை உருவாக்கும் என்றும் தமிழ்நாடு அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
