அந்தகன் ஆந்தம் பாடல் வெளியானது.
நடிகர் பிரசாந்த் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் சில வருடங்களுக்கு முன்பாக அந்தகன் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் பிரசாந்த். இந்த படத்தில் பிரசாந்த் தவிர சிம்ரன், கார்த்திக், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஸ்டார் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை ப்ரீத்தி தியாகராஜன் தயாரித்திருக்கும் நிலையில் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இந்த படத்தை இயக்கி இதற்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். ரவி யாதவ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படமானது இந்தி மொழியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அதன்படி கிரைம் திரில்லர் கதை களத்தில் இந்த படம் தமிழில் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த படம் நீண்ட வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்தது. எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 24) இந்த படத்தின் அந்தகன் ஆந்தம் எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு நடிகர் பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் இந்த பாடலை விஜய் சேதுபதி மற்றும் அனிருத் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.