தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பாடமெடுத்த அமைச்சர் பொன்முடி.
சென்னை சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக அரசியலமைப்பு நாள் நிறைவு விழாவில் உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று உரையாற்றினார். பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஆறுமுகம் , அரசியல் அறிவியல் பிரிவு பேராசிரியர்கள் , மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி பல்வேறு நாடுகளின் ஆட்சி முறைகள் குறித்து கூறினார் , அப்போது Unitary state என்றால் என்ன ..? என்று மாணவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார் அமைச்சர் பொன்முடி .
ஆனால் மாணவர்கள் யாருமே பதில் கூறாதா நிலையில் Unitary state என்றால் ‘ஒற்றை ஆட்சி’ முறை என்று மாணவர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறினார். மேலும் Unitary state என்றால் என்ன என்று கூடவா அரசியல் அறிவியல் படிக்கும் மாணவர்களாகிய நீங்கள் இன்னும் படிக்காமல் இருக்கிறீர்கள் என்று அமைச்சர் பொன்முடி மாணவர்களிடையே கேட்டார். Unitary state ஆட்சிமுறையில் உள்ள நாடு எது என்று மாணவர்களை நோக்கி அடுத்த கேள்வியை எழுப்பினார் , அப்போது மாணவர் ஒருவர் இந்தியா என தவறாக கூற தனது கேள்வியை பேராசிரியர்கள் பக்கம் திருப்பினார். பேராசிரியர்கள் யாராவது இதுக்கு பதில் சொல்லுங்க என அமைச்சர் பொன்முடி மேடையில் அமர்ந்திருந்த தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அரசியல் அறிவியல் பேராசிரியரை நோக்கி கூறினார் .
அப்போது மேடையில் இருந்த அரசியல் அறிவியல் பேராசிரியர் புதுச்சேரி என்று கூற, அமைச்சர் பொன்முடி , ஒரு அரசியல் அறிவியல் பேராசிரியரா? இதுவே தெரியாமல் உள்ளீர்களே என கூறிய அவர். வகுப்பறையில என்ன பாடம் நடத்துறீங்க நீங்களாம்..? ஐயோ.. பாண்டிச்சேரினு சொல்றீங்களே..அது யூனியன் ஸ்டேட்ங்க , யுனைட்டரி ஸ்டேட் இல்ல.. முதலில் வாத்தியார்களுக்கு பயிற்சி கொடுக்கணும் , அப்போதான் மாணவர்கள் படிப்பார்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
பின்னர் தனது கேள்விக்கு தாமே பதிலளித்த அவர் Unitary state முறையில் ஒரே மத்திய அரசுதான் இருக்கும் , அதன் கீழ் மாநில அரசு இருக்காது. மத்திய அரசுக்கு கீழே உள்ளாட்சித் துறைகள் மட்டும் இருக்கும் அதற்கு உதாரணம் பிரிட்டன் நாடு என்றும் , Federal state நாடுகள் என்றால் கூட்டாட்சி நாடுகள் . அமெரிக்கா அதற்கு உதாரணமாக இருந்தது. பல மாநிலங்கள் ஒருங்கிணைந்து ஒரு மத்திய அரசை உருவாக்கி , அதன் கீழ் மாநில அரசுகள் இருப்பதுதான் Federal state என்றும் கூறினார்.
இந்தியா unitary state ம் அல்ல , Federal state ம் அல்ல union of state என்று அம்பேத்கர் கூறினார் என்றும் ஒற்றை ஆட்சி , கூட்டாட்சி இரண்டு தத்துவமும் இணைந்ததுதான் இந்திய கூட்டாட்சி முறை என்றும் அமைச்சர் பொன்முடி படாமெடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர் , 1972 முதல் 1989 வரை 17 ஆண்டுகள் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிய போது மாணவர்களுக்கு அரசியல் அறிவியல் , தற்கால அரசாங்கங்கள் குறித்து தாம் பாடம் எடுத்ததாக கூறினார்.
விடுதலை பெற்றவுடன் இந்தியாவிற்கு சிலர் மதச்சார்புடன் இந்து நாடு என்று பெயர் வைக்க முயற்சித்ததாகவும் ஆனால் அம்பேத்கர் இந்தியா என்று பெயரிட காரணமாக இருந்தார் என்றும் கூறினார். மேலும் தான் படித்த போது தனது வகுப்பில் இருந்த 16 மாணவர்களில் திலகவதி என்ற ஒருவர் மட்டுமே பெண் என்று கூறிய அமைச்சர் பொன்முடி தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம் பெண்கள் உயர்க் கல்வி பயில பெரிதும் உதவுவதாக கூறினார்.


