பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய ஓபிஎஸ் தரப்பு மனு
பொதுக்குழு கூட்டியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் புதிய வழக்கு தொடர்ப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவில், ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யவேண்டும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் தீர்மானங்கள் செல்லும் என கூறவில்லை என மனுவில் ஓபிஎஸ் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.


