கல்விக்கு அப்பால் உற்பத்தி பற்றிய நமது பார்வையிலும் மாற்றம் வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
கடலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் பொன் விழா நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி. ஆ. ராசா, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மழையின்போதும் மாணவர்கள் திறந்த வெளியில் அமர்ந்திருந்ததை குறிப்பிட்ட ராகுல் காந்தி, அதற்காக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தனது உரையைத் தொடங்கினார்.

அப்போது பேசிய அவர், இது தகவல் காலம், ஏராளமான தகவல்கள் மிக எளிதில் கிடைக்கின்றன. மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெறும் அனைத்து விதமான தகவல்களையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டால் இந்த உலகமே மோசமானதாகிவிடும். அவற்றை அறிவாக மாற்றும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்குவதே பள்ளிகளின் கடமை என்றாா். இளம் மாணவர்களை அறிவார்ந்த குடிமக்களாக மாற்றுவதே இதுபோன்ற பள்ளிகளின் கடமை என்றும் கூறினாா்.
நிகழ்ச்சியின் போது, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, அவர்களிடம், தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் யார் என்றும், அவர்களை ஏன் பிடிக்கிறது என்று கேட்டறிந்தார்.
பின்னர் பேசிய அவர், மக்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டும் இந்தியாவை உருவாக்குவதுதான் எனது போராட்டம். எனது 20 ஆண்டு பொதுவாழ்க்கையில் கற்றுக்கொண்ட பணிவுதான் அரசியல் தலைவர்களின் முக்கிய பண்பாக இருக்க வேண்டும் என்று தான் கருதுவதாக ராகுல் தெரிவித்தாா்.
பெண்கள் குறித்து பேசிய அவர், ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள் என்றும், எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து தான் நிறைய கற்றுக் கொண்டதாகவும், பெண்கள் இன்னும் பலதுறைகளில் பெரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றாா்.
பள்ளி பருவத்தில் நான் மிகவும் குறும்புக்கார சிறுவனாக இருந்தேன். விடுதியில் தங்கி படித்தாலும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் பெற்றோரை அடிக்கடி வர வைப்பதற்காக நான் மகிழ்ச்சியாக இல்லை என பெற்றோரிடம் கூறுவேன். நான் அசிரியர்களால் கையாள கடினமான மாணவனாகவே இருந்தேன். என தனது சிறு வயது நினைவுகளை மாணவர்களிடம் ராகுல் பகிர்ந்து கொண்டார்.
மேலும் அவர், கல்வி என்பது செலுவு மிகுந்ததாக இருக்கக் கூடாது. கல்வி வழங்குவதில் அரசின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். உற்பத்தி, சிறு, குறு நிறவனங்களில் அதிக வேலைகளை உருவாக்கும் நிலையை அடைய வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்தாா்.
இந்தியாவில் கல்வி முறை மட்டுமின்றி இந்தியாவில் பலவற்றையும் மாற்ற வேண்டியுள்ளது. கல்விக்கு அப்பால் உற்பத்தி பற்றிய நமது பார்வையிலும் மாற்றம் வேண்டும். சேவைத்துறையில் நாம் சிறப்பாக செயல்பட்டாலும் உற்பத்தித் துறையில் சீனாவை போல் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினாா்.
கைவினை கலைஞர்கள், சிறு, குறு நிறுவனங்களை நாம் ஊக்குவிக்க வேண்டியது நமது கடமை என்றார். மேலும், நமது ஜனநாயக கட்டமைப்பில் ஆட்சியாளர்களால் ஒரு விரிசல் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தாா்.


