அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட விருமாண்டி பிரதர்ஸ்க்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் 1000 காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். காலை 7 மணிக்கு தொடங்கி 12 சுற்றுகளாக இந்த போட்டிகள் நடைபெற்றது. 12வது மற்றும் இறுதிச் சுற்றில் 35 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு வழங்கப்படும் ரூ.8 லட்சம் மதிப்பிலான காரை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


இதேபோல், 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு இருசக்கர வாகனம் பரிசளிக்கப்பட்டது. 16 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்த அவனியாபுரம் ரஞ்சித்துக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது. இதேபோல், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக, தேர்தவு செய்யப்பட்ட காளையின் உரிமையாளர் விருமாண்டி பிரதர்ஸ்க்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது


