விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுவதற்கு தற்போது சாத்தியமில்லை, இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்பது அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு தங்களுடைய வாக்கு வங்கியை நிறுபிக்க முடியுமா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், அக்டோபர் 2ம் தேதி உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். அந்த மாநாட்டிற்கு தேதி குறித்ததில் இருந்து தமிழக அரசியல் திருமாவளவனை சுற்றியே இயங்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறார். “மது ஒழிப்பு மாநாடா, கூட்டணி மாற ஏற்பாடா?” என்று பல்வேறு விமர்சனங்கள் எழத்தொடங்கியது. அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் திருமாவளவனுடன் சந்தித்தார். மது ஒழிப்பில் எங்களுக்கும் உடன்பாடு தான், அதை படிப்படியாக நிறை வேற்றுவோம் என்று கூறியுள்ளார். மேலும் விசிக நடத்தும் மாநாட்டிற்கு திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகிய இரண்டு நிர்வாகிகளை கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த சர்ச்சை, விவாதம் முடிந்தது.
அதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் பேசியது பெரும் விவாதப் பொருளாக மாறியது. அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் ரவிக்குமார், ஆனூர் ஷானவாஸ், சிந்தனை செல்வன் போன்ற தலைவர்கள் எதிர்வினை ஆற்றினார்கள். ஆதவ் அர்ஜூனை கண்டித்தார்கள். மாநிலம் முழுவதும் சிறுத்தைகள் மத்தியில் விவாதமாக மாறியது. அதன் பின்னர் திருமாவளவன் தலையிட்டு இரு தரப்பையும் அழைத்து பேசி சரி செய்தார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு தங்களுடைய வாக்கு வங்கியை நிறுபிக்க முடியுமா? நாம் தமிழர் கட்சி மட்டுமே தனித்து போட்டியிட்டு 8 சதவீதம் வாக்குவங்கியை நிருபித்து உள்ளது. அதுபோன்ற சிறுத்தைகளால் முடியுமா?
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக கிளைகள் இருக்கிறது. தொண்டர்கள் இருக்கிறார்கள். அது வெறும் தலித் மக்களிடம் மட்டுமே செல்வாக்கு பெற்றுள்ளது. பொதுவான வாக்கு வங்கி கிடையாது. இந்த சூழ்நிலையில் தேர்தலில் தனித்து போட்டியிடுவது சிறுத்தைகளுக்கு தற்போது சாத்தியமில்லை.
இப்போது தொல். திருமாவளவனின் பேச்சு, அணுகுமுறை, செயல்பாடுகள் அனைத்தும் மற்ற சமூகத்தினரும் ஆதரிக்க தொடங்கியுள்ளனர். அறிவு தளத்தில் எல்லோரும் ஏற்றுக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். அதனால் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். அதுவரை தனித்து போட்டியிடுவது, செல்வாக்கை நிருபிக்க முயற்சி எடுப்பது சரியான அரசியல் அணுகுமுறையாக இருக்காது என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.