சர்வதேச மகளிர் தினம்; பல்வேறு நிகழ்ச்சிகள்
நாடு முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பெண்களுக்கு இலவச தொழில்முறை பயிற்சிகள் வழங்கும் திட்டம்
மராட்டிய மாநிலம் நாக்பூர் குடும்ப நீதிமன்றம் சார்பில் 2017ம் ஆண்டு முதல் பெண்களுக்கு இலவச தொழில்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், தனித்துவிடப்பட்ட பெண்கள் இதனால் பயன்பெற்று வருகின்றனர். கைவினை பொருட்கள் தயாரிப்பு, அழகு கலை உள்ளிட்ட பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தையொட்டி இந்த திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.

முதலமைச்சரின் பாதுகாப்பு பணியை கையாண்ட பெண்கள்
மத்திய பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டம் காரணமாக நேற்றே மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, முதலமைச்சரின் பாதுகாப்பு பணி முற்றிலும் மகளிர் காவலர்களிடம் வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி அன்றைய தினத்தில் முதலமைச்சரின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகளையும் பெண்களே மேற்கொண்டனர். மேலும் ஒட்டுநர் உள்ளிட்ட பணிகளையும் பெண்கள் கையாண்டனர்.
மகளிர் தினத்தையொட்டி ஒடிசாவில் சிறப்பு மணல் சிற்பம்

மகளிர் தினத்தையொட்டி பெண்களை கொண்டாடும் வகையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய சிற்பம் அனைவரையும் கவர்ந்தது. ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அனைத்து துறைகளிலும் மகளிர் ஈடுபட்டு வருவதை விளக்கம் வகையில் மணல் சிற்பத்தை அவர் உருவாக்கினார். ஹோலி பண்டிகையும் இன்று கொண்டாடப்படுவதால், பல வண்ணங்களை வைத்து அவர் மணல் சிற்பத்தை உருவாக்கி இருந்தார்.


