புத்தர் மானுடத்தின் ஒருமையை, சமத்துவத்தை பிரகடனப்படுத்தியவர்,
சாதி, இன ஏற்றத்தாழ்வைக் கடுமையாக எதிர்த்தவர்.
அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என சுட்டிக் காட்டியவர்.
‘கீழ் சாதி’ எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ மேல் சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ போலவே ஒளி விட்டு எரிந்திடும்’
‘மேல்சாதி எனப்படும் ஒருவன் தாயிடமிருந்து பிறப்பது என்பது கீழ் சாதி எனப்படும் ஒருவன் தாயிடமிருந்து பிறப்பதினின்று ஒரு துளி கூட வேறுபட்டதன்று’
எந்த இனத்தை சார்ந்த மனிதராயினும் பிணி, மூப்பு, இறப்பு ஆகியவற்றுக்கு ஆட்படுவர்.
சாதி, இனம், பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பேதம் காண எந்த காரணமும் இல்லை
பிறப்பால் எவரும் கீழ் சாதி இல்லை
பிறப்பால் எவரும் மேல் சாதி இல்லை.
மனித குலத்தை பிரிப்பது அவர்தம் செயல்களே தவிர பிறப்பல்ல.
என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் துயரமான சாதிய அடுக்கு முறை (நான்கு வருணக்) கோட்பாட்டையும், அவற்றை நியாயப்படுத்த உண்டாக்கப்பட்ட கடவுள், கர்மவிதி,ஆன்மா, மறுபிறப்பு, யாகம், பலி கொடுத்தல் ஆகிய மூடநம்பிக்கைகளை முதன்முதலாக எதிர்த்த மாபெரும் புரட்சியாளர் புத்தர்.
வாழ்க்கைக்கு புத்தர் காட்டிய வழி முறைகள்
காதால் கேட்டதால் மட்டுமே எதையும் நம்பி விடாதே
பல தலைமுறைகளாகப் போற்றப்பட்டு வருபவை என்ற காரணத்தினாலேயே எதையும் நம்பாதே
உன் ஆசிரியர்களுக்கு மூத்தோர் சொல்கிறார்கள் என்பதனாலேயே எதையும் நம்பாதே
வெளித் தோற்றத்திற்கு உண்மையாக தெரிகின்ற தர்க்கத்தையும், பழக்கத்தினால் உன்னிடம் சேர்ந்துவிட்ட மனச்சாய்வையும் நம்பாதே
எல்லோருக்கும்மான நன்மைக்கும் ஆதாயத்திற்கும் ஏற்ற ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு முறையான காரணத்தை நீ கண்டறியும் போது, ஆழ்ந்த சிந்தனை செய், ஆய்வு செய், பிறகு ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்வும்.