சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகவும், பருவமழை முடியும் வரை ஆங்காங்கே ராட்சத மோட்டார்கள் எடுக்க வேண்டாமென முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023-24ம் கல்வியாண்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் மெட்ராஸ் ரவுண் டேபிள் மூலம் கட்டப்பட்ட 8 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி வகுப்பறைக் கட்டிடம் மற்றும் சிறிய நூலகம், சிறிய ஆய்வகம் கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சு என்றால் மாணமிகு சுயமரியாதைக்காரன் என அர்த்தம். இன்று 2 முக்கியமான நாள், ஒன்று சமத்துவம் என்று நாம் பேசுவதற்கு காரணமான சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் நினைவுநாள். மற்றொன்று எங்களை ஆளாக்கியிருக்கிற துணை முதல்வரின் பிறந்தநாள். இன்று அவரின் பிறந்தநாளையொட்டி அரசு நிகழ்வாக இந்த வகுப்பறை திறப்பு நடைபெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த பள்ளியில் படித்த அனைத்து மாணவிகளும் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 1.25 கோடி அளவில் கட்டிடம் கொடுத்துள்ளனர். காமராஜர் காலத்திற்குப் பின்பாக பெரிய அளவில் பள்ளிகளில் கட்டிடம் கட்டப்படவில்லை. அதன்படி, பேராசிரியர் அன்பழகன் பெயரில் திட்டம் தொடங்கப்பட்டு 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிட்டு, 7300 வகுப்பறைகள் இதுவரை திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள், காலை உணவு முதல் கல்லூரி வரையும், வேலைவாய்ப்பு வரையும் வழங்கும் முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்துள்ளது. 1800க்கும் மேற்பட்ட மோட்டார்கள் வைக்கப்பட்டு மழைநீர் அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை முடியும்வரை அனைத்து மோட்டார்களை எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் சொல்லி இருக்கின்றார். ஒரே நாளில் பெருங்குடியில் 8 சென்டிமீட்டர் மழை பெய்தது, உடனடியாக எங்கேயும் தண்ணீர் நிற்காத வண்ணம் மழைநீர் அகற்றப்பட்டது. புதிய முயற்சிகள் பல எடுக்கப்பட்டு வருகிறது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் 160 ஏக்கர் நிலத்தில் அரசு நான்கு நீர் நிலைகள் உருவாக்கி, 4.60 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாராயணபுரம் ஏரியிலிருந்து ஒரு ஆயிரம் கனஅடி வரை மட்டுமே வெளியேறும் வகையில் இருந்த கால்வாயை, துணைமுதலமைச்சர் நேரடியாக ஆய்வு செய்தததை தொடர்ந்து கூடுதலான ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றக்கூடிய பாதையை கண்டறிந்து வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏரியை பலப்படுத்தக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஏரி கரைப்பகுதியில் இருந்த 4 கோவில்கள் அகற்றப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
‘மரியாதைக்காகத்தான் ராமதாஸூக்கு அழைப்பு’: முறுக்கும் திமுக- மறுக்கும் பாமக