தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது ஆதங்கத்தையும், அதேவேளையில் கூட்டணியின் அவசியத்தையும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
திமுக கூட்டணியில் விசிக-வுக்கு எதிர்பார்த்த எண்ணிக்கையை விடக் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்:
”திமுக கூட்டணியில் குறைவான தொகுதிகளை ஒதுக்குவதால் வலி இருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை. எங்கள் கட்சியின் வளர்ச்சிக்கும், களப்பணிக்கும் ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற உணர்வு தொண்டர்களிடையே உள்ளது.”

தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணியை விட்டு வெளியேறாததற்கான காரணத்தையும் விளக்கினார், ”திமுக தலைமையிலான இக்கூட்டணி சுமார் 23 கட்சிகளைக் கொண்ட ஒரு மெகா கூட்டணி. இவ்வளவு பெரிய கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் திருப்திப்படுத்தி, அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் திமுக தலைமைக்கு உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்” என்றாா்.
மேலும், தனிப்பட்ட விருப்பங்களை விட லட்சியமே முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், “கூட்டணி வலிமையாக இருந்தால் மட்டுமே வலதுசாரி (மதவாத) சக்திகளை வீழ்த்த முடியும். சித்தாந்த ரீதியாக நம் எதிரிகளைத் தோற்கடிக்க வேண்டிய தேவை இருப்பதால், இந்த வலியைப் பொறுத்துக் கொண்டு கூட்டணியைத் தொடர்கிறோம்,” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
2026 தேர்தலில் சமூக நீதி காக்கப்படவும், மதவாத சக்திகள் தமிழகத்திற்குள் கால் பதிக்காமல் இருக்கவும் இந்த மெகா கூட்டணி ஒருமித்த கருத்துடன் செயல்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…
