தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக வந்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக தொண்டர் ஒருவர், தவெக நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்ல தங்களை அனுமதிக்கவில்லை என கண்ணீர்மல்க வேதனை தெரிவித்துள்ளார்.


அதிமுகவின் முன்னாள் அடிப்படை உறுப்பினரான இலுப்பூர் தாலுகாவைச் சேர்ந்த கலியபெருமாள் செய்தியாளர்களிடம் அழுதபடி பேசியதாவது:
”எங்கள் இலுப்பூர் தாலுகாவிலிருந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் தவெக-வில் இணைவதை நேரில் பார்ப்பதற்காக நாங்கள் மிக ஆர்வத்துடன் இங்கு வந்திருந்தோம்.
காலை 7 மணிக்கே நாங்கள் அரங்கிற்குள் சென்றுவிட்டோம். இடையில் இயற்கை உபாதைக்காக (கழிப்பிடம்) வெளியே வந்தோம். ஆனால், தற்போது எங்களை மீண்டும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். கடந்த இரண்டு மணி நேரமாக உள்ளே விடுங்கள் என்று கெஞ்சி, வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறோம்.
இதையெல்லாம் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இத்தனை வருடங்கள் அதிமுகவில் இருந்தபோது கூட எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை நடந்ததே இல்லை. இந்த அவமரியாதையை யாரிடம் சொல்லி அழுவது என்றே தெரியவில்லை.”
மேலும், தங்களின் வாழ்வாதாரத்தை விடுத்து வந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “நாங்கள் இங்கு சும்மா வரவில்லை, எங்களுடைய அன்றாட வேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறோம்.
அன்றைய நாள் கிடைக்க வேண்டிய ஆயிரம் ரூபாய் கூலியைக்கூட இழந்துவிட்டுத்தான் இங்கு வந்தோம்” என்று கண்ணீருடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். முன்னாள் அமைச்சர் தவெக-வில் இணையும் நிகழ்வில், அவரது சொந்த ஊர் தொண்டர் ஒருவரே அரங்கிற்கு வெளியே அனுமதிக்கப்படாமல் அழுத சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
