சென்னையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக கைதுசெய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 பேர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


சென்னை, ஜே.ஜே. நகர், பாரி சாலை, இ.பி பூங்கா அருகே கடந்த நவ., 3-ம் தேதி இரவு, போதைப்பொருள் விற்பனைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (21) என்ற கல்லூரி மாணவனை ஜே.ஜே. நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 17 LSD ஸ்டாம்ப், போதைப் பொருளும், 3 கிராம் OG கஞ்சாவும் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘ரெடிட்’ ஆன்லைன் ஆப் மூலமாக போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தி வந்ததோடு, அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது.
அவர் கொடுத்த தகவலின் படி, மந்தைவெளியை சேர்ந்த அரவிந்த் பாலாஜி (20), கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வத்சல் (21) , மறைமலை நகரை சேர்ந்த திரிசண் சம்பத் (20), ஆருணி(20) உள்ளிட்ட 10 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 94 எல்.எஸ்.டி ஸ்டாம்ப், 48 எம்.டி.எம்.ஏ போதை மாத்திரை, 700 கிராம் ஓ.ஜி கஞ்சா, 5 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட கார்த்திகேயனின் மொபைல் நம்பரை ஆய்வு செய்து விசாரணை மேகொண்டபோது, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் மற்றும் அவரது நண்பர்கள் தொடர்ச்சியாக பேசி வந்தது தெரியவந்தது. நேற்று காலை நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 7 நபர்களை அண்ணா நகர் துணை ஆணையர் தனிப்படை போலீசார், ஜெ.ஜெ நகர் காவல் நிலையம் அழைத்துவந்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அலிகான் துக்ளக், கார்த்திகேயனிடமிருந்து ஓ.ஜி கஞ்சா போன்ற போதை பொருட்களை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் துக்ளக் அலிகான் அவரது நண்பர்களுடன் இணைந்து பிற நண்பர்களுக்கும் வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்(26) மற்றும் அவரது நண்பர்களான புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சையது ஷாகி(22), முகமது ரியாஸ் அலி(28), பாசில் அஹமது(26), குமரன், முகேஷ் , சந்தோஷ் என மொத்தம் 7 நபர்களை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெ.ஜெ நகர் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, 7 பேரையும் சிறையில் அடைப்பதற்காக போலிசார் பலத்த பாதுகாப்புடன் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துவந்தனர். அப்போது, நீதிமன்ற வளாகத்திற்கு வந்த மன்சூர்அலிகான் காத்திருந்த தனது மகனிடம் கஞ்சா பயன்படுத்தினா போலீஸ் கைது செய்வார்கள் என்று தெரியாதா? ஏன் தவறு செய்தாய் என அறிவுரை வழங்கினார். மேலும் சாப்பிட்டாயா என கேட்டறிந்தார்.. தொடர்ந்து நீண்ட நேரமாக நீதிமன்றத்திலேயே காத்துக் கிடந்தார்.


